மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Sunday, November 28, 2010

உ(து)யர வாழ்க்கை


 இனி உயரப் போறவைகளுக்கெல்லாம் . .
ஊட்டம் கொடுப்பதற்கு
தான் உயரத்தில் நாங்கள் . . .


உயர்வை காண முடியவில்லை
என்றழுபவர் மத்தியில்
உயரங்கள் மட்டுமே எங்கள் உயிர்க்கான வழி
எங்கள் உழைப்பின்
எழுத்துக்கள் எடுத்தெறியப்பட்டு
உயரங்கள் அழகூட்டப்படும்


உறங்கும் போது போனாலென்ன
உயரத்திலிருந்து போனாலென்ன
சிந்தனைகளிலும் உயர்ந்து தான்


உயிர்போன பின்
உண்டி உறைவிடம் ஊன்(உடல்) அனுப்ப
எஞ்சியவற்றை உறையில் அனுப்பும் உண்மை


உயரங்கள் மாறிக்கொண்டிருக்கும்
உயிர்க்கான உத்தரவாதம்
மட்டும் எள்ளளவும் மாறாமல் 

பயமில்லையா ? யார் சொன்னது
எங்கோ ஒரு தேசத்தில், உறவுகள் உயிரோடு இருக்கவேண்டுமே,
என்ற பயம் தான், எப்பொழுதும் . . .


 எப்பொழுதாவது உயரத்தில்
உள்ளவர் கணக்கு உதைக்கும்
உச்சி வெயிலில் கண்ணீர் உறைந்து போயிருக்கும் 


உயர்ந்த பணி
முடித்த தருணத்தில்
விண்ணுலகம் உயர்ந்தவன் கணக்கும் உறைக்குள் 
உயரம் உருப்பெறும் போது
உள்ளே செல்ல
அனுமதி ஏது ? 


எங்கோ ஓரிடத்தில்
எதுவோ சரிசெய்ய
ஊஞ்சலாடுவதோடு உறவு முடிந்துவிடும் 

உடலின் உணர்வுகளும் உபாதைகளும்
நீர்த்துபோயினும்
வயிற்றிற்கு மட்டும் அவ்வப்போது 

உயரம் தாண்டுதலில்
உயிர் மிச்சமிருந்தால் . . . ?!!!
ஊருக்கு சென்று . . . 

முதலில் இந்தக் கவிதை எழுதுவதற்கு கருவமைத்த திரு. ரிஷான் ஷெரிப் அவர்களின் பதிவிற்கும், மிக அரிய படங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்,

நான் வார்த்த வார்த்தைகளை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

என்று இந்தப் படங்கள் கண்டேனோ, அன்றே, அர்த்தமில்லாத புலம்பல்கள் அதிகம் வருவதில்லை.

இக்கவிதை, எங்கோ பிறந்து வயிறுக்காக வானம் சுடும் வலிகளுடன் வாடும் மனித உறவுகளுக்கு சமர்ப்பணம்,

ஐயன்மீர், வணங்குகின்றேன் உங்களின் உழைப்பை.

திரு. சிவராமனின் இரண்டாவது மின்னஞ்சலையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

2011/1/5 sivaji sivaji.E.Raman., <. . . . @gmail.com>
அன்பு நண்பருக்கு வணக்கம் ,
எப்போதாவது நேரம் இருக்கிறது அப்போதெல்லாம் , வலைகளில் அலைகிறேன் , மிகப்பெரிய கடலுக்குள் முத்துகள் எங்காவது தான் இருக்கிறது. அது போல வலை கடலுக்கு உள்ளேயும் வேண்டாத விஷ மீன்கள் வண்ண ஜாலம் காட்டி அலைவது போல வேண்டாத விஷயங்கள் தான் அதிகம் உள்ளது .  வேண்டிய  விசயங்களை தேடிபிடிபதும் , பிடித்த
விசயங்களை முழுதும் படிப்பதும் , நேரம் சரியாகப் போய்விடுகிறது .
ஆனால் , அந்த விசயங்களை தேடிப்பிடித்து நமக்கும் படிக்க அளிபவர்களை, பாரட்ட கூட வேண்டாம் , ஆனால் படித்ததற்கு சாட்சியாக , அவர்களுக்கு
நன்றி தெரிவிப்பதும் அவசியம். அதையாவது செய்வது அவர்களை கௌரவிக்கும் , நான் தங்கள்  உ(து)யர வாழ்க்கை என்ற கவிதையைப் படித்தேன்  , வெளிநாடுக் கட்டங்களின் உயரத்தை மட்டுமே பார்த்த நான் இன்று தான் உண்மையையும் பார்த்தேன் நடுங்க வைக்கும் உயரத்தில் தம்மை நம்பி இருப்பவர்களுக்காக நரகத்தில்  (நான் இன்றுவரை வெளிநாட்டின் நல்ல நகரத்தில் தான் வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் இருப்பதாக  எண்ணினேன் அது அந்த கவிதையின் உயரத்திலும் , உண்ணத்திலும் , உடைந்து போனது .)
வாழ்பவர்களின் உயிர் என்கண் முன்னே உசலடுகிறது . ஆனால் அவர்கள் வாழவேண்டும் பல ஆண்டு .
நன்றி ! வணக்கம் !
நட்புடன் , E . சிவராமன் ,

- - - - - -


அன்பின் சிவராமன்,

உங்கள் எண்ணங்களுக்கு என் வந்தனங்கள்,

வருகைக்கும், வார்ப்பிர்க்கும் மிக்க நன்றி,

வெளிநாடு என்பது ஒரு வெளிப்புற மாயையே,

அங்கு வாழும் ஒவ்வொரும் கணமும், நீங்கள் அந்நிய நாட்டவர் என்பது, ஏதாவது ஒரு வகையில் அறிவிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருக்கும்,
இதில், பணக் கஷ்டமும் சேர்ந்தால்:

அரேபியா அனுபவங்களை திரு. சிவா, இங்கு பகிர்ந்துள்ளார், இத்தனைக்கும் அவர் நல்ல பதவியில் பணி புரிந்தவர், அவருடைய அனுபவமே இப்படி என்றால்,

கூலி வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆட்களின் நிலையை, திரு. செந்தில் இங்கு செதுக்கியுள்ளார்,

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்,

தொடருங்கள், உங்கள் பதிவுலகின் பயணத்தை, பல தகவல்கள் அறிந்துகொள்ளலாம்,

மகிழ்வுடன்,
மார்கண்டேயன் 
         

4 comments:

  1. அருமை கவிதைகளும் படங்களும்!

    ReplyDelete
  2. வித்யாசமாக செய்கிற உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஐயன்மீர், வணங்குகின்றேன் உங்களின் உழைப்பை//

    ம்ம்ம் :((

    ReplyDelete
  4. //அருமை கவிதைகளும் படங்களும்!//

    தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி,

    // . . . வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி,

    //ம்ம்ம் :((//

    :((

    ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது