மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Saturday, October 30, 2010

மேன்மக்கள்

மலக்குழியில் இறங்கி
மனமிறந்து
மலம் அள்ளுபவரும்

சாப்பாட்டில் கை வைக்க
சாக்கடை அள்ள
சமாதானம் செய்துகொண்டோரும்

சுயகழிவகற்ற முடியாத
நோய் சுற்றிய மனிதனை
சுத்தம் செய்வோரும்

பிணவாடையின்
வீச்சங்களை விட்டொளித்த
பிண்டமறுப்போனும்

கலைக்கென்று சொல்லியே
காமப் பசியாற்றும்
கலைச் செல்விகளும்

சொந்த வீட்டிலும்
சுத்தமில்லா சுரணையற்றோர்
நடக்கும் வீதிகளை சுத்தம் செய்வோரும்

ஆயிரக்கணக்கானோர்
அவசரத்தில் வீசும் அசிங்கங்களை
அள்ளி எறிந்து அழகாக்குவோரும்

தொலைத்த காமத்தால்
வயிற்றில் தொடர்வதை
வழித்து எடுத்து வழிசெய்வோரும்

அவசரத்தில் பிறந்ததால்
அனாதையாக்கப்பட்ட
அன்பான குழந்தைகளும்

குப்பையை கிளறி
குடும்பம் நடத்தும்
குடியானவர்களும்

விலைபேசப்படும் உலகில்
இன்னும் விதைத்துக் கொண்டிருக்கும்
விவரம் கெட்ட விவசாயியும்

யார் வாழ்ந்தாலும்
வாழத் தெரியாத
மேன்மை கெடாத இந்த
மேன்மக்கள்
இன்னும் எத்தனை ஆயிரமோ ?

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்தமைக்கு வாழ்த்தி வணங்குகின்றேன்.

Sunday, October 24, 2010

மொழியாள்(ழ்)

அந்நிய தேசமது
அகலாத இரவின் நீட்சி
அதிகாலைப் பொழுது
ஆழ ஊடுருவும் குளிர்

அழுத்தம் கொடுக்கும் வயிறு
அடித்து எழுப்ப
அவசரமாக அவ்விடம் ஓட . . .
அங்கே அழகி ஒருத்தி

அவ்வேளையிலும்
அழகாக்கிக் கொண்டிருந்தாள்
அலுங்காமல் அசிங்கமாக்குமிடத்தை
அவசரமறிந்து பார்த்தாள்

அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தாள்
அவசரமாய் கதவடைத்து
அழுத்தம் அகற்றுகிறேன்
அலுக்காமல் நின்றவள்

அமைதியாய் தொடர்கிறாள், தான்
அனுதினம் செய்யும் பணியை
அடிமனதில் ஏதோ ஒன்று அறுக்க
அங்கிருந்து அன்பு பிறக்க

அவளின் கண்களுக்கு கொடுக்க
ஆறுதலாய் ஏற்றுக்கொண்டு
அவள் வேலையை தொடர்கிறாள்
ஆயிரம் மொழிகளுக்கு அடிப்படையான
அன்பெனும் மொழியை உணர வைத்த
அழகு மொழியாள்(ழ்)

இக்கவிதையை 'திண்ணையில்' அமரச் செய்தமைக்கு என் அன்பான நன்றிகளை அளிக்கின்றேன்.

Sunday, October 3, 2010

நான் இறந்து போயிருந்தேன் . . .

நான் இறந்து போயிருந்தேன் . . .
நிராகரிப்பின் நீச்சிகள்
நீளும் தருணங்களிலெல்லாம்
உடலெரிந்து பின்னிருக்கும்
சாம்பல் துகள்கள்
காற்றில் பறப்பதைப்போல்
நான் இறந்து போயிருந்தேன்
எறிந்த தரை இருப்பது போல
உயிர் இருந்தும் . . .

ஞானக் கணக்கை
நேர் செய்ய
பலரால் பல வழிகளில்
'நான்' இறந்து போயிருந்தேன் . . .
ஞானக் கண் மட்டுமேனோ
இன்னும் திறப்பதற்கு வழியேயில்லை ?!!

தாய்ப்பால் தடை செய்யப்பட்ட
காலம் தொட்டு
பால்யத்தில் கரம் பிடித்தவளின்
பிரிவு உட்கொண்டு
கணக்கற்ற தடவை
நான் இறந்து போயிருந்தேன் . . .

தொடர்ந்துகொண்டே இருக்கிறது
இறப்பும் பிறப்பும்
பள்ளித் தேர்வில் தவறிய போது
கல்லூரித் தகுதி அடையாதபோது
இன்னும் எத்தனையோ . . .

புதிது புதிதாய் . . .
'நான்' மட்டும் மாறாமல்
இருகோட்டுத் தத்துவமாய்
இறந்து கொண்டேயிருக்கின்றேன் . . .

இத்தனை முறை
மீள்த்துயிர்ந்தாலும்
இறுதி மூச்சு உள்ளவரை . . .
உதிரம் உளுத்துப் போகும் வரை
இனி மாற்ற முடியாத
இறுதிக்கோடாய்

இயல்பாய் இவனுள் சென்றவளை
இதயமறுத்து ஈருடலாய்
மெய்பித்தபோது . . .
வக்கற்றவனாய் . . .
கடைசியாய், உயிரோடு
நான் இறந்து போயிருந்தேன் . . .
இனிமேல் மீள முடியாமல்

இது திரு. கார்க்கி அவர்களின் வலைப்பூவில் பாரத் பாரதி அவர்கள் பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 'நான் இறந்து போயிருந்தேன் . . .' சவால் கவிதைப் போட்டிக்காக எழுதியது.

இக்கவிதையை 'திண்ணையில்' அமரச் செய்தமைக்கு என் அன்பான நன்றிகளை அளிக்கின்றேன்.