மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Saturday, October 30, 2010

மேன்மக்கள்

மலக்குழியில் இறங்கி
மனமிறந்து
மலம் அள்ளுபவரும்

சாப்பாட்டில் கை வைக்க
சாக்கடை அள்ள
சமாதானம் செய்துகொண்டோரும்

சுயகழிவகற்ற முடியாத
நோய் சுற்றிய மனிதனை
சுத்தம் செய்வோரும்

பிணவாடையின்
வீச்சங்களை விட்டொளித்த
பிண்டமறுப்போனும்

கலைக்கென்று சொல்லியே
காமப் பசியாற்றும்
கலைச் செல்விகளும்

சொந்த வீட்டிலும்
சுத்தமில்லா சுரணையற்றோர்
நடக்கும் வீதிகளை சுத்தம் செய்வோரும்

ஆயிரக்கணக்கானோர்
அவசரத்தில் வீசும் அசிங்கங்களை
அள்ளி எறிந்து அழகாக்குவோரும்

தொலைத்த காமத்தால்
வயிற்றில் தொடர்வதை
வழித்து எடுத்து வழிசெய்வோரும்

அவசரத்தில் பிறந்ததால்
அனாதையாக்கப்பட்ட
அன்பான குழந்தைகளும்

குப்பையை கிளறி
குடும்பம் நடத்தும்
குடியானவர்களும்

விலைபேசப்படும் உலகில்
இன்னும் விதைத்துக் கொண்டிருக்கும்
விவரம் கெட்ட விவசாயியும்

யார் வாழ்ந்தாலும்
வாழத் தெரியாத
மேன்மை கெடாத இந்த
மேன்மக்கள்
இன்னும் எத்தனை ஆயிரமோ ?

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்தமைக்கு வாழ்த்தி வணங்குகின்றேன்.

2 comments:

  1. நன்றி நண்பரே, மேன்மக்கள் இல்லையென்றால், நமக்கு மேன்மை ஏது

    ReplyDelete

வன்முறையான, ஆபாசமான, அனாவசியமான, அநாமதேயமான தன்மையில் வரும் கருத்துக்கள், பின்னூட்டங்கள், பிரசுரிக்கப்படமாட்டது என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன், இது போல பின்னூட்டமிட்டவர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது