மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Sunday, November 28, 2010

உ(து)யர வாழ்க்கை


 இனி உயரப் போறவைகளுக்கெல்லாம் . .
ஊட்டம் கொடுப்பதற்கு
தான் உயரத்தில் நாங்கள் . . .


உயர்வை காண முடியவில்லை
என்றழுபவர் மத்தியில்
உயரங்கள் மட்டுமே எங்கள் உயிர்க்கான வழி
எங்கள் உழைப்பின்
எழுத்துக்கள் எடுத்தெறியப்பட்டு
உயரங்கள் அழகூட்டப்படும்


உறங்கும் போது போனாலென்ன
உயரத்திலிருந்து போனாலென்ன
சிந்தனைகளிலும் உயர்ந்து தான்


உயிர்போன பின்
உண்டி உறைவிடம் ஊன்(உடல்) அனுப்ப
எஞ்சியவற்றை உறையில் அனுப்பும் உண்மை


உயரங்கள் மாறிக்கொண்டிருக்கும்
உயிர்க்கான உத்தரவாதம்
மட்டும் எள்ளளவும் மாறாமல் 

பயமில்லையா ? யார் சொன்னது
எங்கோ ஒரு தேசத்தில், உறவுகள் உயிரோடு இருக்கவேண்டுமே,
என்ற பயம் தான், எப்பொழுதும் . . .


 எப்பொழுதாவது உயரத்தில்
உள்ளவர் கணக்கு உதைக்கும்
உச்சி வெயிலில் கண்ணீர் உறைந்து போயிருக்கும் 


உயர்ந்த பணி
முடித்த தருணத்தில்
விண்ணுலகம் உயர்ந்தவன் கணக்கும் உறைக்குள் 
உயரம் உருப்பெறும் போது
உள்ளே செல்ல
அனுமதி ஏது ? 


எங்கோ ஓரிடத்தில்
எதுவோ சரிசெய்ய
ஊஞ்சலாடுவதோடு உறவு முடிந்துவிடும் 

உடலின் உணர்வுகளும் உபாதைகளும்
நீர்த்துபோயினும்
வயிற்றிற்கு மட்டும் அவ்வப்போது 

உயரம் தாண்டுதலில்
உயிர் மிச்சமிருந்தால் . . . ?!!!
ஊருக்கு சென்று . . . 

முதலில் இந்தக் கவிதை எழுதுவதற்கு கருவமைத்த திரு. ரிஷான் ஷெரிப் அவர்களின் பதிவிற்கும், மிக அரிய படங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்,

நான் வார்த்த வார்த்தைகளை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

என்று இந்தப் படங்கள் கண்டேனோ, அன்றே, அர்த்தமில்லாத புலம்பல்கள் அதிகம் வருவதில்லை.

இக்கவிதை, எங்கோ பிறந்து வயிறுக்காக வானம் சுடும் வலிகளுடன் வாடும் மனித உறவுகளுக்கு சமர்ப்பணம்,

ஐயன்மீர், வணங்குகின்றேன் உங்களின் உழைப்பை.

திரு. சிவராமனின் இரண்டாவது மின்னஞ்சலையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

2011/1/5 sivaji sivaji.E.Raman., <. . . . @gmail.com>
அன்பு நண்பருக்கு வணக்கம் ,
எப்போதாவது நேரம் இருக்கிறது அப்போதெல்லாம் , வலைகளில் அலைகிறேன் , மிகப்பெரிய கடலுக்குள் முத்துகள் எங்காவது தான் இருக்கிறது. அது போல வலை கடலுக்கு உள்ளேயும் வேண்டாத விஷ மீன்கள் வண்ண ஜாலம் காட்டி அலைவது போல வேண்டாத விஷயங்கள் தான் அதிகம் உள்ளது .  வேண்டிய  விசயங்களை தேடிபிடிபதும் , பிடித்த
விசயங்களை முழுதும் படிப்பதும் , நேரம் சரியாகப் போய்விடுகிறது .
ஆனால் , அந்த விசயங்களை தேடிப்பிடித்து நமக்கும் படிக்க அளிபவர்களை, பாரட்ட கூட வேண்டாம் , ஆனால் படித்ததற்கு சாட்சியாக , அவர்களுக்கு
நன்றி தெரிவிப்பதும் அவசியம். அதையாவது செய்வது அவர்களை கௌரவிக்கும் , நான் தங்கள்  உ(து)யர வாழ்க்கை என்ற கவிதையைப் படித்தேன்  , வெளிநாடுக் கட்டங்களின் உயரத்தை மட்டுமே பார்த்த நான் இன்று தான் உண்மையையும் பார்த்தேன் நடுங்க வைக்கும் உயரத்தில் தம்மை நம்பி இருப்பவர்களுக்காக நரகத்தில்  (நான் இன்றுவரை வெளிநாட்டின் நல்ல நகரத்தில் தான் வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் இருப்பதாக  எண்ணினேன் அது அந்த கவிதையின் உயரத்திலும் , உண்ணத்திலும் , உடைந்து போனது .)
வாழ்பவர்களின் உயிர் என்கண் முன்னே உசலடுகிறது . ஆனால் அவர்கள் வாழவேண்டும் பல ஆண்டு .
நன்றி ! வணக்கம் !
நட்புடன் , E . சிவராமன் ,

- - - - - -


அன்பின் சிவராமன்,

உங்கள் எண்ணங்களுக்கு என் வந்தனங்கள்,

வருகைக்கும், வார்ப்பிர்க்கும் மிக்க நன்றி,

வெளிநாடு என்பது ஒரு வெளிப்புற மாயையே,

அங்கு வாழும் ஒவ்வொரும் கணமும், நீங்கள் அந்நிய நாட்டவர் என்பது, ஏதாவது ஒரு வகையில் அறிவிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருக்கும்,
இதில், பணக் கஷ்டமும் சேர்ந்தால்:

அரேபியா அனுபவங்களை திரு. சிவா, இங்கு பகிர்ந்துள்ளார், இத்தனைக்கும் அவர் நல்ல பதவியில் பணி புரிந்தவர், அவருடைய அனுபவமே இப்படி என்றால்,

கூலி வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆட்களின் நிலையை, திரு. செந்தில் இங்கு செதுக்கியுள்ளார்,

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்,

தொடருங்கள், உங்கள் பதிவுலகின் பயணத்தை, பல தகவல்கள் அறிந்துகொள்ளலாம்,

மகிழ்வுடன்,
மார்கண்டேயன் 
         

Saturday, November 20, 2010

பிரியாத பிரிவுகள்

பிரிந்தவுடன் கலந்து
பிறந்து பின்
பிறப்பில் பிரிக்கும் பிரிவு

பின் பிம்பங்களாய்
பிடித்துக் கொடுக்கப்பட்டு
பிரிவுகள் பலவாய் பிறந்து

பிரிவிற்கான முதலீடை பணத்தால் செய்ய
பிரித்தாளும் ருசி கண்டு
பிறதொரு காரணிகளாய் சாதி, மதம் கை கொடுக்க

பிரித்துப் பார்த்து, பிரித்துப் பார்த்து
பிரிவுகளைக் கூட்டி
பிரிக்கப்பட்டவைகளில் ஒதுங்கி

பிரிந்த சிலவற்றில் சேர்ந்து
பிரிவென்ற சொல்லை மறைத்து
பிரியவில்லை என்ற பிரிய பூச்சு கொடுத்து

பிரிவிலும் மகிழ்ந்து
பிரிவுகள் பலவாய் பெருக்கி
பிரிந்த பிரிவுகள் சில சேர்த்து

பிரிவிலும் பிளவாக்கி
பிரிந்து நின்று, பிறப்பறுக்கும் பிரிவுணர்தவுடன்
பிரிவின் வலி அறிந்து

பிரிவறுத்த பின்னொரு நாளில் மனிதம் பிறக்க
பிரிவில்லையென்று பிதற்ற
பிரித்தவைகளைத் தேடியலைய . . .

பிரிந்திரிந்தது பிரித்தவரின் உடல் . . .
பிரிந்த பிண்டத்தை கண்டு . . .
பிதற்றியது பிரியப்போகும் பிணம்

பிரிவில் வாழ வழி கண்ட
பிணங்கள் சில
பிரிவுகளோடு பிரியாமல், இன்னும் . . .

இக்கவிதையை 'திண்ணையில்' அமர இடம்கொடுத்த திண்ணியர்க்கு தித்திப்பான நன்றி.

2011/1/13 Raman E. Siva
அன்புள்ள நண்பரை வலையில் மீண்டும் சந்திப்பதில் மகிழுவகை அடைகின்றேன் ,
நான் தங்களுடைய blog spot ல் மீண்டும் நுழைந்தேன் தங்களுடைய , மூன்று கவிதைகளை வாசித்தேன் , மிகவும் அருமை அதில் எனக்கு சிலகருத்துக்கள் உண்டு.
நல்ல நட்பை வளர்க்க போற்றுதலும் , புகழுதலும் மட்டும் போதாது குறைகளை சுட்டிக்காட்டுவதும் , போதிய விளக்கம் பெறுவதும் அவசியம் என்பதால் இந்த மின்-கடிதத்தை வரைகின்றேன்,  முதலில், முதலாளித்துவத்தின் சுறண்டல்.

. . . . . .

மற்ற இரு கவிதை

நண்பேன் . . . ?!? (மற்றும்) பிரியாத பிரிவுகள்

இந்த இரு கவிதைகளில் அளவுக்கு அதிகமான எதுகைகள் , சில இடங்களில் சுவையை குறைக்கிறது . சில இடங்களில் ( இயற்கையாக அமைந்தாலும் கூட)  ஒரே எழுத்துகளில் வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்றே சேர்த்து இருப்பதாக தோன்றுகிறது .

இதை தாங்கள் கவனத்தில் கொண்டு , ஆலோசிக்க வேண்டுகிறேன் .

இந்த கவிதைகளில் தங்களுடைய நிலைபாட்டையும், அறிய ஆவல் கொள்கிறேன் .

இப்படிக்கு , தங்கள் "ப்ளாக்" கில் புதிய படைப்புகளை எதிர் நோக்கும் .

வாசகன்

E . சிவராமன்
மதுரை        
- - - - - -

அன்பின் சிவராமன்,

தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,

மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,

கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,

நட்புடன்,
மார்கண்டேயன். 

Sunday, November 14, 2010

முதலாளித்துவத்தின் சுறண்டல்

இயல்பு வாழ்வின்
இறகொடித்து
இயந்திரமாக்கினார்

பண்டமாற்றை
பணமாக்கி
பண்பாடு அகற்றினார்

படிக்கும் கல்விதனை
பணம் செய்வதற்கென்றே
பதியச் செய்தார்

விளையும் பொருளில்
விதிகள் கொண்டு
வினை மாற்றி வீணாக்கினார்

விலை நிலம்
விஷமாக, விவசாயியை
விஷம் உண்ணவைத்தார்

தாய்ப்பால் முதல்
தாரம் சுமக்கும் கரு வரை
தனி விலை வைத்தார்

உள்ளாடை போல்
உள்ளுருப்புக்கும்
உரிய விலை செய்தார்

விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்

காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு . . .

ஐயன்மீர் . . ., தயவுசெய்து அதற்கும்,
விலை வைத்து விடுங்கள்
உயிர் விடும் முன் முதலாளியாகிறேன்

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழ்த்துகள்.

. . .  திரு. சிவராமனின் மின்னஞ்சலின் தொடர்ச்சி,

இந்த கவிதையில்
விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு.

இந்த வரிகளில் மனிதன் விடும் கழிவு உரமாக இரண்டாம் உலகபோர்முடிவில்  ஐரோப்பாவின் சில பகுதிகளில்  உரதட்டுப்பாட்டின் காரணமாக விலைவைத்து, விற்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டுள்ளேன் . மேலும் முன்பே நமது நாட்டிலும் , தற்போது வடகொரியவிலும் மனிதகழிவுக்கு விலையுண்டு . உரங்களுக்கு மனித கழிவை பயன்படுத்த எல்லா நாடுகளிலும் கணிசமான செலவில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளகிறார்கள்.

அடுத்து இந்த வரியில்

உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்

என்ற வரியில் உள்ள கருத்துகளில் அதே ஐரோப்பாவில் மருத்துவ ஆராய்சிக்கு முன்பெல்லாம் பிற்போக்கு சமயவாதிகள்  மனித உடலை அறுப்பதையும் , ஆராய்ச்சி செய்வதையும் அனுமதிக்கவில்லை அப்போது , சில மருத்துவர்கள்  திருடர்களிடம் இறந்த உடலை புதைத்தபின் தோண்டி எடுத்து விலைகொடுத்து பெற்றுக்கொண்டார்கள் . இன்றும் கூட நமது நாட்டில் மந்திர, தந்திரங்களுக்கு, பயன்படுத்த உடல்களும், எலும்புகளும் மறைமுகமாக விற்கப்படுகிறது .  
 
- - - - - -
நன்றி, சிவராமன், புதிய தகவல், 

நீங்கள், அதன் சுட்டிகளை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், 
 
கருத்துக்களை, கமெண்ட்ஸ் பகுதியில் அனுப்பினால் மிகவும் எளிதாக இருக்கும் (இருவருக்கும்),
தங்களின் பொறுமையான எழுத்து, நன்றாக உள்ளது, விரைவில் உங்களின் பதிவுகளை காண்பதற்கு ஆவலாக உள்ளது, 

நட்புடன்,
மார்கண்டேயன்.
- - - - - -

Saturday, November 6, 2010

நண்பேன் . . . ?!?

மூலையில் முனகிக்கொண்டிருந்தவனை
முன் நிறுத்தி
முகவரி கொடுத்தேன்

முகவரி பெற்றவன்
முடிவதெல்லாம் தன்னாலென்று
முழுமதியற்று முழங்கினான்

முழங்கிய முட்டாள்
முட்டுக் கட்டையானான்
முடிவெடுக்க விடாமல்

முன் ஏற்றுக் கொண்ட பணிகள்
முடங்கவைத்து
முழுமகிழ்ச்சி கொண்டான்

முடிவதெல்லாம் தன்னால்
முடிவதென்று
முடிவற்ற பிம்பம் கண்டான்

முச்சந்தியில் பிதற்றினான்
முடிந்த இடங்களிலெல்லாம்
முரசடித்தான்

முரசொலி பொறுக்காமல்
மூடச் சொன்னேன் வாயை
மூடன் சொன்னான் வென்றதாய்

முழுதும் அறிந்தவர்
முன் வந்து சொன்னார்
முனகுபவனெல்லாம் முடியாதவர்

முன்னிறுத்துவது முடங்கிவிடுமென்று
முழுதும் உணர்ந்தாலும்
முயற்சிகள் அயர்ந்தன

முடிவெடுத்தேன்
முயற்சியற்றவனை
முன்வைப்பதில்லையென

முடிந்தவரை எதிரிகளை சந்திக்கின்றேன்
முடிவு வரும் காலம் வரை
முழுதுமறிந்த பின் முழங்குகின்றேன் நண்பேன் . . .

இக்கவிதையை திண்மையுடன் திண்ணையில் வீற்றச் செய்த திண்ணை ஆசிரியர்க் குழுவினருக்கு நன்றி.


2011/1/13 Raman E. Siva
அன்புள்ள நண்பரை வலையில் மீண்டும் சந்திப்பதில் மகிழுவகை அடைகின்றேன் ,
நான் தங்களுடைய blog spot ல் மீண்டும் நுழைந்தேன் தங்களுடைய , மூன்று கவிதைகளை வாசித்தேன் , மிகவும் அருமை அதில் எனக்கு சிலகருத்துக்கள் உண்டு.
நல்ல நட்பை வளர்க்க போற்றுதலும் , புகழுதலும் மட்டும் போதாது குறைகளை சுட்டிக்காட்டுவதும் , போதிய விளக்கம் பெறுவதும் அவசியம் என்பதால் இந்த மின்-கடிதத்தை வரைகின்றேன்,  முதலில், முதலாளித்துவத்தின் சுறண்டல்.



மற்ற இரு கவிதை

நண்பேன் . . . ?!? (மற்றும்) பிரியாத பிரிவுகள்

இந்த இரு கவிதைகளில் அளவுக்கு அதிகமான எதுகைகள் , சில இடங்களில் சுவையை குறைக்கிறது . சில இடங்களில் ( இயற்கையாக அமைந்தாலும் கூட )    ஒரே எழுத்துகளில் வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்றே சேர்த்து இருப்பதாக தோன்றுகிறது .
இதை தாங்கள் கவனத்தில் கொண்டு , ஆலோசிக்க வேண்டுகிறேன் .
இந்த கவிதைகளில் தங்களுடைய நிலைபாட்டையும் , அறிய ஆவல் கொள்கிறேன் .
இப்படிக்கு , தங்கள் "ப்ளாக்" கில் புதிய படைப்புகளை எதிர் நோக்கும் .
வாசகன்
E . சிவராமன்
மதுரை       

அன்பின் சிவராமன்,

தொடர்ந்த வருகைக்கும், கருத்தாய்வுக்கும் மிக்க நன்றி,

மறுபடி எழுதும் பொழுது கவனத்தில் கொள்கின்றேன்,

கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளவும்,

நட்புடன்,
மார்கண்டேயன்.