மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .

Showing posts with label வார்ப்பில் வார்த்தவை. Show all posts
Showing posts with label வார்ப்பில் வார்த்தவை. Show all posts

Friday, February 25, 2011

(2011) - புதிய ஆண்டா ?

(2011) - புதிய ஆண்டா ?

காலங் காலமாய் கணிக்கப்பட்ட
கணக்குகள் புறக்கணிக்கப்பட்டு

இடைச் சொருகலாய்
வந்த க்ரிகோரியக் கணக்கு
கண்மூடி கைகொள்ளப்பட

இழந்த இயற்கையின்
இம்மியளவும் உணர்ச்சியின்றி

இருண்ட நேரத்தில்
இடைவிடா கூச்சலோடு

கள்வெறி கைகோர்க்க
கட்டவிழ்ந்த காமத்தோடு

கல்தோன்றிய காலத்திற்கே
கட்டாய அழைப்பாய்

புதிய ஆண்டிற்கான நெறியறியாமல்
புது எண் மாற்றத்திற்கு
புல்லுருவிகளின்
புரிதலற்ற அழைப்பு . . .

புதிய ஆண்டு நமக்குமா ?

மார்கண்டேயன்,
மதுரை, பாரதம்.

மேலும் தகவலுக்கு  

இந்த வார்த்தைகளை வார்ப்பில் வார்த்து வளம் சேர்த்தமைக்கு வார்ப்பு குழவினருக்கு மிக்க நன்றி.

Sunday, November 28, 2010

உ(து)யர வாழ்க்கை


 இனி உயரப் போறவைகளுக்கெல்லாம் . .
ஊட்டம் கொடுப்பதற்கு
தான் உயரத்தில் நாங்கள் . . .


உயர்வை காண முடியவில்லை
என்றழுபவர் மத்தியில்
உயரங்கள் மட்டுமே எங்கள் உயிர்க்கான வழி
எங்கள் உழைப்பின்
எழுத்துக்கள் எடுத்தெறியப்பட்டு
உயரங்கள் அழகூட்டப்படும்


உறங்கும் போது போனாலென்ன
உயரத்திலிருந்து போனாலென்ன
சிந்தனைகளிலும் உயர்ந்து தான்


உயிர்போன பின்
உண்டி உறைவிடம் ஊன்(உடல்) அனுப்ப
எஞ்சியவற்றை உறையில் அனுப்பும் உண்மை


உயரங்கள் மாறிக்கொண்டிருக்கும்
உயிர்க்கான உத்தரவாதம்
மட்டும் எள்ளளவும் மாறாமல் 

பயமில்லையா ? யார் சொன்னது
எங்கோ ஒரு தேசத்தில், உறவுகள் உயிரோடு இருக்கவேண்டுமே,
என்ற பயம் தான், எப்பொழுதும் . . .


 எப்பொழுதாவது உயரத்தில்
உள்ளவர் கணக்கு உதைக்கும்
உச்சி வெயிலில் கண்ணீர் உறைந்து போயிருக்கும் 


உயர்ந்த பணி
முடித்த தருணத்தில்
விண்ணுலகம் உயர்ந்தவன் கணக்கும் உறைக்குள் 
உயரம் உருப்பெறும் போது
உள்ளே செல்ல
அனுமதி ஏது ? 


எங்கோ ஓரிடத்தில்
எதுவோ சரிசெய்ய
ஊஞ்சலாடுவதோடு உறவு முடிந்துவிடும் 

உடலின் உணர்வுகளும் உபாதைகளும்
நீர்த்துபோயினும்
வயிற்றிற்கு மட்டும் அவ்வப்போது 

உயரம் தாண்டுதலில்
உயிர் மிச்சமிருந்தால் . . . ?!!!
ஊருக்கு சென்று . . . 

முதலில் இந்தக் கவிதை எழுதுவதற்கு கருவமைத்த திரு. ரிஷான் ஷெரிப் அவர்களின் பதிவிற்கும், மிக அரிய படங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம்,

நான் வார்த்த வார்த்தைகளை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

என்று இந்தப் படங்கள் கண்டேனோ, அன்றே, அர்த்தமில்லாத புலம்பல்கள் அதிகம் வருவதில்லை.

இக்கவிதை, எங்கோ பிறந்து வயிறுக்காக வானம் சுடும் வலிகளுடன் வாடும் மனித உறவுகளுக்கு சமர்ப்பணம்,

ஐயன்மீர், வணங்குகின்றேன் உங்களின் உழைப்பை.

திரு. சிவராமனின் இரண்டாவது மின்னஞ்சலையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

2011/1/5 sivaji sivaji.E.Raman., <. . . . @gmail.com>
அன்பு நண்பருக்கு வணக்கம் ,
எப்போதாவது நேரம் இருக்கிறது அப்போதெல்லாம் , வலைகளில் அலைகிறேன் , மிகப்பெரிய கடலுக்குள் முத்துகள் எங்காவது தான் இருக்கிறது. அது போல வலை கடலுக்கு உள்ளேயும் வேண்டாத விஷ மீன்கள் வண்ண ஜாலம் காட்டி அலைவது போல வேண்டாத விஷயங்கள் தான் அதிகம் உள்ளது .  வேண்டிய  விசயங்களை தேடிபிடிபதும் , பிடித்த
விசயங்களை முழுதும் படிப்பதும் , நேரம் சரியாகப் போய்விடுகிறது .
ஆனால் , அந்த விசயங்களை தேடிப்பிடித்து நமக்கும் படிக்க அளிபவர்களை, பாரட்ட கூட வேண்டாம் , ஆனால் படித்ததற்கு சாட்சியாக , அவர்களுக்கு
நன்றி தெரிவிப்பதும் அவசியம். அதையாவது செய்வது அவர்களை கௌரவிக்கும் , நான் தங்கள்  உ(து)யர வாழ்க்கை என்ற கவிதையைப் படித்தேன்  , வெளிநாடுக் கட்டங்களின் உயரத்தை மட்டுமே பார்த்த நான் இன்று தான் உண்மையையும் பார்த்தேன் நடுங்க வைக்கும் உயரத்தில் தம்மை நம்பி இருப்பவர்களுக்காக நரகத்தில்  (நான் இன்றுவரை வெளிநாட்டின் நல்ல நகரத்தில் தான் வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் இருப்பதாக  எண்ணினேன் அது அந்த கவிதையின் உயரத்திலும் , உண்ணத்திலும் , உடைந்து போனது .)
வாழ்பவர்களின் உயிர் என்கண் முன்னே உசலடுகிறது . ஆனால் அவர்கள் வாழவேண்டும் பல ஆண்டு .
நன்றி ! வணக்கம் !
நட்புடன் , E . சிவராமன் ,

- - - - - -


அன்பின் சிவராமன்,

உங்கள் எண்ணங்களுக்கு என் வந்தனங்கள்,

வருகைக்கும், வார்ப்பிர்க்கும் மிக்க நன்றி,

வெளிநாடு என்பது ஒரு வெளிப்புற மாயையே,

அங்கு வாழும் ஒவ்வொரும் கணமும், நீங்கள் அந்நிய நாட்டவர் என்பது, ஏதாவது ஒரு வகையில் அறிவிக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருக்கும்,
இதில், பணக் கஷ்டமும் சேர்ந்தால்:

அரேபியா அனுபவங்களை திரு. சிவா, இங்கு பகிர்ந்துள்ளார், இத்தனைக்கும் அவர் நல்ல பதவியில் பணி புரிந்தவர், அவருடைய அனுபவமே இப்படி என்றால்,

கூலி வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆட்களின் நிலையை, திரு. செந்தில் இங்கு செதுக்கியுள்ளார்,

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்,

தொடருங்கள், உங்கள் பதிவுலகின் பயணத்தை, பல தகவல்கள் அறிந்துகொள்ளலாம்,

மகிழ்வுடன்,
மார்கண்டேயன் 
         

Sunday, November 14, 2010

முதலாளித்துவத்தின் சுறண்டல்

இயல்பு வாழ்வின்
இறகொடித்து
இயந்திரமாக்கினார்

பண்டமாற்றை
பணமாக்கி
பண்பாடு அகற்றினார்

படிக்கும் கல்விதனை
பணம் செய்வதற்கென்றே
பதியச் செய்தார்

விளையும் பொருளில்
விதிகள் கொண்டு
வினை மாற்றி வீணாக்கினார்

விலை நிலம்
விஷமாக, விவசாயியை
விஷம் உண்ணவைத்தார்

தாய்ப்பால் முதல்
தாரம் சுமக்கும் கரு வரை
தனி விலை வைத்தார்

உள்ளாடை போல்
உள்ளுருப்புக்கும்
உரிய விலை செய்தார்

விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்

காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு . . .

ஐயன்மீர் . . ., தயவுசெய்து அதற்கும்,
விலை வைத்து விடுங்கள்
உயிர் விடும் முன் முதலாளியாகிறேன்

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழ்த்துகள்.

. . .  திரு. சிவராமனின் மின்னஞ்சலின் தொடர்ச்சி,

இந்த கவிதையில்
விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு.

இந்த வரிகளில் மனிதன் விடும் கழிவு உரமாக இரண்டாம் உலகபோர்முடிவில்  ஐரோப்பாவின் சில பகுதிகளில்  உரதட்டுப்பாட்டின் காரணமாக விலைவைத்து, விற்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டுள்ளேன் . மேலும் முன்பே நமது நாட்டிலும் , தற்போது வடகொரியவிலும் மனிதகழிவுக்கு விலையுண்டு . உரங்களுக்கு மனித கழிவை பயன்படுத்த எல்லா நாடுகளிலும் கணிசமான செலவில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளகிறார்கள்.

அடுத்து இந்த வரியில்

உயிர் விட்ட உடலும்
காலி உடலின் கழிவுகளையும்

என்ற வரியில் உள்ள கருத்துகளில் அதே ஐரோப்பாவில் மருத்துவ ஆராய்சிக்கு முன்பெல்லாம் பிற்போக்கு சமயவாதிகள்  மனித உடலை அறுப்பதையும் , ஆராய்ச்சி செய்வதையும் அனுமதிக்கவில்லை அப்போது , சில மருத்துவர்கள்  திருடர்களிடம் இறந்த உடலை புதைத்தபின் தோண்டி எடுத்து விலைகொடுத்து பெற்றுக்கொண்டார்கள் . இன்றும் கூட நமது நாட்டில் மந்திர, தந்திரங்களுக்கு, பயன்படுத்த உடல்களும், எலும்புகளும் மறைமுகமாக விற்கப்படுகிறது .  
 
- - - - - -
நன்றி, சிவராமன், புதிய தகவல், 

நீங்கள், அதன் சுட்டிகளை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், 
 
கருத்துக்களை, கமெண்ட்ஸ் பகுதியில் அனுப்பினால் மிகவும் எளிதாக இருக்கும் (இருவருக்கும்),
தங்களின் பொறுமையான எழுத்து, நன்றாக உள்ளது, விரைவில் உங்களின் பதிவுகளை காண்பதற்கு ஆவலாக உள்ளது, 

நட்புடன்,
மார்கண்டேயன்.
- - - - - -

Saturday, October 30, 2010

மேன்மக்கள்

மலக்குழியில் இறங்கி
மனமிறந்து
மலம் அள்ளுபவரும்

சாப்பாட்டில் கை வைக்க
சாக்கடை அள்ள
சமாதானம் செய்துகொண்டோரும்

சுயகழிவகற்ற முடியாத
நோய் சுற்றிய மனிதனை
சுத்தம் செய்வோரும்

பிணவாடையின்
வீச்சங்களை விட்டொளித்த
பிண்டமறுப்போனும்

கலைக்கென்று சொல்லியே
காமப் பசியாற்றும்
கலைச் செல்விகளும்

சொந்த வீட்டிலும்
சுத்தமில்லா சுரணையற்றோர்
நடக்கும் வீதிகளை சுத்தம் செய்வோரும்

ஆயிரக்கணக்கானோர்
அவசரத்தில் வீசும் அசிங்கங்களை
அள்ளி எறிந்து அழகாக்குவோரும்

தொலைத்த காமத்தால்
வயிற்றில் தொடர்வதை
வழித்து எடுத்து வழிசெய்வோரும்

அவசரத்தில் பிறந்ததால்
அனாதையாக்கப்பட்ட
அன்பான குழந்தைகளும்

குப்பையை கிளறி
குடும்பம் நடத்தும்
குடியானவர்களும்

விலைபேசப்படும் உலகில்
இன்னும் விதைத்துக் கொண்டிருக்கும்
விவரம் கெட்ட விவசாயியும்

யார் வாழ்ந்தாலும்
வாழத் தெரியாத
மேன்மை கெடாத இந்த
மேன்மக்கள்
இன்னும் எத்தனை ஆயிரமோ ?

இக்கவிதையை வார்ப்பில் வார்க்க வழி செய்தமைக்கு வாழ்த்தி வணங்குகின்றேன்.

Thursday, September 23, 2010

காலச்சுவடுகள் . . .

பிடித்தாலும், நிறுத்த நினைத்தாலும்,
நிற்காமல் புதிது புதிதாய்,
பதிகின்ற காலச்சுவடுகள்,

எப்போழுதென்றே தெரியவில்லை . . .
ஆரம்பம்,

முதல் சுவடு எது,
கடைசி பதிப்பு எது,
விடையில்லா தொடர்கதை,

எங்கேயோ, எப்பொழுதோ,
விட்டதோ, தொட்டதோ,
யார் யாரோ,
அனைத்தும் ஒன்று விடாமல்,

மறதி மறந்து
மனம் நின்றுகொண்டிருந்தாலும்,

காலச்சுவடுகள் மட்டும்
நிற்காமல்
அடுத்த பதிவை நோக்கி . . .

நன்றி, வார்ப்பு.

Friday, August 13, 2010

ஓடி உதைத்து விளையாடு...

நிராகரிப்பு
நம்பிக்கை துரோகம்
நயவஞ்சக கூட்டம்
பந்துகளாய் உன்னை
பந்தாட வரலாம்
உண்மை உயர்சிந்தனை
உறுதியான உள்ளம், உடல் . . .
ஊக்கம், விடாமுயர்ச்சியுடன்
உன்னை உரமேற்றி வைத்துக்கொள்
ஒடுங்கிப்போகாமல், ஓய்ந்துவிடாமல்
ஓடி உதைத்து விளையாடு

நன்றி, வார்ப்பு

Tuesday, June 29, 2010

முடிந்து போன பாதை

ஒவ்வொரு வினாடிகளும்
முடிந்து போன பாதையாய்
மாறிக்கொண்டிருக்கும்
இடைவிடாத வாழ்க்கை பயணத்தில்
முன் உள்ள நேரங்களை
முயற்ச்சியின் வழி முன்னிறுத்தி
முடிந்ததற்கும்
முடியப்போறவைகளுக்கும்
முறியாத முடிச்சுகள் போட்டுவைப்போம்

நன்றி, வார்ப்பு

Monday, May 31, 2010

என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகள்

சுயம் தேடும் பறவையாக . . .
என்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகளிலிரிந்து
எப்பொழுதாவது என்னை மீட்டெடுக்கிறேன்
மீட்டெடுக்கும் தருணங்களில் . . .
மீதமுள்ள வாழ்க்கையின்
வாக்கியங்கள்
நிகழ்கால நிஜங்களால்
முற்றுப்பெறாமல்...
நீரோடையில் மிதக்கும் தக்கையாக . . .

நன்றி., வார்ப்பு இணைய இதழுக்கு.

Friday, May 28, 2010

பரம்பொருள் பார்த்தோமே

பாய்விரிப்பதைப் பற்றி பகர்வதே
பாவமெனப் பார்க்கும் பண்பாட்டில்
பாய்விரித்ததைப் பதிவுசெய்ய
பதுக்கிவைத்த பதிவுக்கருவியில்
பதிவுசெய்ததை
பலர் பார்க்கும் படக்கருவியில்
பலமுறை பலரோடு
பார்த்து பரவசமடைந்து
பரம்பொருள் பார்த்தோமே . . .

பார்த்ததை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.

Friday, April 16, 2010

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

மார்க்கண்டேயனின் மனதில் மலர்ந்த படத்திற்கான பதிவு, ஒரு குறுங்கவிதையாக வார்க்கப்பட்டுள்ளது

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி

உனக்கென்ன . . .
ஒற்றை பாதணி தொலைத்தபோது, மிஞ்சிய
ஒற்றை பாதணியை பத்திரப்படுத்திவிட்டாய்,
அன்றைத் தொலைந்த என் இதயம் மட்டும்,
இன்னும்,
தொலைந்து போன ஒற்றை பாதணியாய் . .

மலர்ந்த நாள்: ஸௌராஷ்டிரா விஜயாப்தம் 698, முதல் மாதம், மூன்றாம் தேதி.


என் வரிகளை வார்ப்பில் வார்த்து, வளரச்செய்த வார்ப்பு குழுவினருக்கு வாழிய வாழ்த்துகள்,


மார்கண்டேயன், மதுரை, பாரதம்

Wednesday, October 21, 2009

நீ வருவாய்

நீ வருவாய்
நீ வருவாய் என . . .

நீ சென்ற வழியெல்லாம் தேடிப்பார்க்கிறேன்

நீ வந்த வழியெல்லாம் வந்துபோகிறேன்

நீ வாழ்ந்த வாசலில் விழியை விதைக்கிறேன்

நீ வாசம் வீசிய இடங்களிலிருந்து சுவாசம்பெறுகிறேன்

நீ புன்னகை வீசிய இடங்களில் எல்லாம் பூத்துக்குலுங்குகிறேன்

நீ பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து பிரியமுடியாமல் தவிக்கிறேன்

நீ கொடுத்த நம்பிக்கையால் மட்டுமே உயிர் வாழ்கிறேன்

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .

நீ இருந்த இடங்களில் நான் இறந்தும் இருக்கின்றேன்

நீ இல்லாத இடங்களில் நான் இருந்தும் இறந்திருக்கிறேன்

என்ற என் இருப்பை உறுதி செய்ய

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் . . .


மார்கண்டேயன்

அன்புடையீர்,

கவிதையை வாசித்தமைக்கு நன்றிகள் பல,

நான் வார்த்த வார்த்தைகளை வளம் குறையாமல் வார்த்தெடுத்து, என்னை கவிஞர்கள் வரிசையில் அமர்த்திய வார்ப்பு இணையதள குழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்,

இந்த கவிதை கீழ் காணும் வலைத்தொடர்பில் உள்ளது,

http://www.vaarppu.com/view/1946